அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவுக்கு இன்னும் 17 தினங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக, லக்னௌ காவல்துறை இணை ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்னௌ இணை ஆணையர் உபேந்திர குமார் அகர்வால், “தற்போது மக்கள் அயோத்திக்கு கம்தா, பாரபங்கி வழியாக சின்ஹாட் மாத்தியாரிக்கு பயணம் செய்கிறார்கள். இதனால், சுல்தான்பூர் மாற்று வழித்தடத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. எனவே, இந்த மாற்று வழிகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட வி.வி.ஐ.பி.க்களும், வி.ஐ.பி.க்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகவே, போலீஸார் பாதுகாப்பையும், ரோந்து பணியையும் பலப்படுத்தி இருக்கின்றனர்.
அதேபோல, வி.வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் முக்கிய அழைப்பிதழின் அட்டையில் இராமர் கோவிலின் நிழற்படமும், அதன் கீழே ‘ஸ்ரீராம் தாம்’ என்றும், அதற்கு கீழே ‘அயோத்தி’ என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், முக்கிய அழைப்பிதழின் அட்டையில் “விசேஷ அழைப்பிதழ்” (அபூர்வ அனாடிக் நிமந்திரன்”) என்று இந்தியில் அச்சிடப்பட்டிருக்கிறது.