தாவூத் இப்ராஹிமின் இரண்டு பினாமி சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஜனவரி 2023-ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிமின் மருமகனிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்திய போது, அவர் பாகிஸ்தானில் மறுமணம் செய்து கொண்டதாகவும், கராச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறினார்.
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளது.
இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் தாவூத்தின் சொத்துக்களை ஏலம் விடும் பணி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் இரு சொத்துக்கள் ஏலம் போனது. இரண்டு சொத்துக்கள் முறையே ரூ. 2.01 கோடி மற்றும் ரூ. 3.28 லட்சத்துக்கு வெற்றிகரமாக விற்கப்பட்டன. ரத்னகிரியில் உள்ள மும்பாகே கிராமத்தில் மேலும் இரண்டு பினாமி சொத்துக்கள் விற்கப்படாமல் உள்ளன.
தாவூத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் தாவூத்தின் பல சொத்துகள் அரசால் ஏலம் விடப்பட்டுள்ளன. தாவூத் இப்ராஹிமின் சொத்துகளின் முதல் ஏலம் 2000ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது யாரும் ஏலம் எடுக்கவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிம் குழந்தை பருவ வீடு உள்ளிட்ட ஆறு சொத்துகள் 2020ஆம் ஆண்டில் ஏலத்திற்கு வந்தன. கடந்த 2017-ம் ஆண்டு தெற்கு டெல்லியில் தாவூத்திற்கு சொந்தமான ஹோட்டல் உள்பட 3 சொகுசு பங்களாக்களை மத்திய அரசு விற்பனை செய்தது.