இதுவரை 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட வெளிப்படையான ஆன்லைன் ஏல முறையின் உதவியுடன் அமைச்சகம் 7 சுற்று ஏலத்தை முடித்திருக்கிறது.
அந்த வகையில், இதுவரை 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. இவற்றில் 6 வணிகச் சுரங்கங்கள் ஏற்கெனவே நிலக்கரி உற்பத்தியைத் தொடங்கி விட்டன. மேலும், 3 வணிகச் சுரங்கங்கள் வரும் மாதங்களில் நிலக்கரி உற்பத்தியை தொடங்கும்.
இந்த நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 220 மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.