நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” முழக்கத்தை பா.ஜ.க. எழுப்பி வருகிறது. மேலும், இதனால் தேர்தல் செலவு குறையும் என்பதோடு, நேரமும் மிச்சமாகும் என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதற்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் நிலைக் குழுவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமைத்திருக்கிறது.
இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 பேர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், அதீர் ரஞ்சன் செளத்ரி இக்குழுவில் அங்கம்வகிக்க மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு 2 முறை கூடி, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை செய்தது.
இந்த நிலையில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்த பரிந்துரைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை https://onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.