நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, பலர் ராமர் குறித்து கவிதைகள், பாடல்கள், பஜனைகளை பாடி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராமர் பஜனை பாடல் ஒன்றை நேற்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர், “அயோத்தியில் கடவுள் ராமரை வரவேற்பதில் ஒட்டு மொத்த நாடும் மகிழ்ச்சி அடைகிறது. இந்த சிறப்பான தினத்தை முன்னிட்டு ராமர் மீதான பக்தியில் மூழ்கி உள்ள பக்தர்கள், தங்களது உணர்வுகளை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். கடவுள் ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி, பாடிய பஜனை பாடலை கேளுங்கள்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பாடலை பாடிய பாடகர் ஜூபின் நௌதியால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பாரத பிரதமர் நரேந்திர மோடியை நான் ஒரு உலகளாவிய தலைவராக தான் பார்க்கிறேன். நாங்கள் கச்சேரிகளுக்காக தொலைதூர நாடுகளுக்குச் செல்கிறோம், எங்கு சென்றாலும், இந்தியர்கள் மீதும் எங்கள் இசை மீதும் மிகுந்த மரியாதை உள்ளது.
இந்திய இசை, கலாசாரம், உணவு, அதற்கான பெருமை என்னைப் பொறுத்த வரையில் நமது பிரதமருக்கே உரியது. .அவரைப் போன்ற ஒரு உலகளாவிய தலைவர் நம்மைப் போன்ற சிறு கலைஞர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும்போது, அது இன்னும் பல நல்ல பணிகளைச் செய்ய உந்துதலாக அமைகிறது.
எங்கள் பணியை அவர் கவனத்தில் எடுத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், என்றாவது ஒரு நாள் அவரைச் சந்தித்து ஆசிகளைப் பெற விரும்புகிறேன்.” என்று கூறினார்.