திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜபி அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக 50 ரூபாய் வரிசையில் பணம் செலுத்தி சென்றாலும் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
பக்தர்கள் தரிசனம் முடிந்து செல்லும் வழியாக பலர் அழைத்து வரப்பட்டு கருவறை முன் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவ்வப்போது பிரச்சினை எழுந்து வந்தது. இதனிடையே மே மாதம் வரை, பவுர்ணமி நாட்கள் தவிர மற்ற நாட்களில், ஒரு மணி முதல் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதற்கு வசதியாக, வடக்கு அம்மணி அம்மன் கோபுரம், கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் எளிதாக, விரைவாக தரிசனம் செய்தனர். ஆனால், கடந்த ஜூன் மாதம் தி.மு.க., நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீதரின் அண்ணன் ஜீவானந்தம் தலைமையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது.