இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயிலில், தீவிபத்து ஏற்பட்டதில், 5 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரிலிருந்து தலைநகர் டாக்காவை நோக்கி பயணிகள் இரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இரயிலின் 4 பெட்டிகளில் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் இரயில்வே அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் இருந்த மக்கள் இரயிலில் இருந்த பயணிகளை மீட்க உதவினர். தீவிபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இந்த தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிலரின் சதிச்செயலால் இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இதேபோன்ற இரயில் தீ விபத்து சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்க்கட்சி காரணம் என்று அரசும், போலீஸ் தரப்பும் குற்றம் சாட்டியது. எனினும், இதை எதிர்க்கட்சி திட்டவட்டமாக மறுத்தது.