புதுதில்லியில் நாளை ‘தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் மூலம் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்’ குறித்த கருத்தரங்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகம், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழும், பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை இயக்க தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில மாதங்களுக்குள், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4400 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்த முன்முயற்சிக்காக மத்திய அரசின் மருந்தியல் துறை தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.
அவற்றில் 2300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் ஏற்கனவே ஆரம்ப நிலை ஒப்புதலைப் பெற்றுள்ளன. அவற்றில் 149 சங்கங்கள் மக்கள் மருந்தக மையங்களாக செயல்பட முழு அளவில் தயாராக உள்ளன.
கூட்டுறவுத் துறைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.
மக்கள் மருந்தகமாக செயல்படும் இந்த முன்முயற்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். கிராமப்புறங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும்.
இந்த முக்கிய முன்முயற்சிகள் அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.