திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் தொடங்குவது மரபு. ஆடி மாதத்தில் விதைத்த நெல் தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இதனை அறுவடை மாதம் எனறும் கூறுவார்கள். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் பானை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பானைகள் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளில், புதுப் பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படைத்து, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் உணவளித்து மகிழும் பொங்கல் பண்டிகைக்கு, விவசாயிகள் அதிக அளவில் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்வர் என்ற நம்பிக்கையில், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.