இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது.
இலங்கை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. எனவே, இங்குள்ள கொழும்பு துறைமுகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனாவின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
குறிப்பாக, சீனாவில் இருந்து ஷின்யான் 1, 2, 3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1, 3, 6, 16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றன. இந்த சூழலில், கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் “ஷி யான் 6” எனும் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், 2022-ல் “யுவான் வாங் 5” எனும் சீன கப்பல், இலங்கையின் தெற்கே உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தில் 7 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த உளவுக் கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதனால், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நிலைகளையும் கண்காணிக்க இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படலாம் என்கிற கவலையை இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் எழுப்பி வந்தது.
குறிப்பாக, இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீன கருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருப்பதால் சீனக் கப்பல்களை நிறுத்த இந்தியா கடும் எதிர்ப்பும் தெரிவித்தது.
மேலும், சீன உளவுக் கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனாலும், இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு சீனக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது. இதற்கு, இந்தியாவும், அமெரிக்காவும் கவலை தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான “சியாஸ் யாஸ் ஹாஸ்-3” என்ற கப்பலை இம்மாதம் 5-ம் தேதி முதல் மே மாதம் வரை நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப் போவதாக சீனா கூறியது.
இப்படிப்பட்ட சூழலில்தான், சீனக் கப்பல் இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவின் இக்கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. எந்தவொரு ஆராய்ச்சிக் கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிலுக கதுருகமுவ கூறுகையில், “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடைக் காலம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.
எனினும், இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.