அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சிறைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அயோத்தி இராமஜென்ம பூமியில் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கும்பாபிஷேக விழாவை தீபாவளி போல கொண்டாடும்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தவிர, அயோத்தி கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் உள்ள சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இந்த சூழலில், உ.பி. மாநிலத்திலுள்ள அனைத்து சிறைகளிலும் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், “ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது மாநிலத்திலுள்ள சிறைகளில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
இவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். ஆகவே, இந்த நிகழ்வில் இருந்து அவர்கள் விலகி இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சம்பவங்கள் நடக்கும்போது அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். புனிதமான அந்நேரத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது” என்றார்.