மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. அரசு படைகளுக்கு எதிராகக் களமிறங்கி இருக்கும் பழங்குடியின ஆயுதக்குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரைக் கைப்பற்றி இருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், இராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஆயுதம் ஏந்திய குழுக்களில் 3 முக்கிய அமைப்புகள் அடங்கி இருக்கின்றன. இக்குழுக்கள், இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. மேலும், இந்த ஆயுதக் குழு இராணுவத்தின் பிடியிலிருந்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கே சீனாவை ஒட்டியுள்ள லாக்காயிங் என்ற முக்கிய நகரை ஆயுதக் குழு கைப்பற்றி இருக்கிறது. கடந்த பல வாரங்களாக நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகு, இராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தது.
அதேசமயம், இந்த சண்டையில் மியான்மர் இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் சீனா, ஆயுதக்குழுவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. காரணம், இக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணிப் படையில், சீன பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.
இதனிடையே, இரு தரப்பினரும் போரை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு சீனா தொடர்ந்து கூறி வருகிறது.