எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அப்போது, ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், போலீஸ் அதிகாரிகளும் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் 21-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர். இத்தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீஸார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வரும் 9-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
அப்போது, எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.