முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை வாங்க நகரங்களுக்கு செல்வதும் உண்டு.
அதனை வாழ்த்து அட்டை என்று சாதாரணமாக கூறி விட முடியாது. அழகான புகைப்படம், அர்த்தமுள்ள வாக்கியம் என பார்த்து பார்த்து வாங்கிய காலத்தை மறக்க முடியாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நம்மை பிடித்தவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்வது உண்டு. அதில் செதுக்கும் அந்த சில வரிகளுக்காக பல மணிநேரம் யோசிப்பது உண்டு. ஏன் நாள் கணக்கில் சிந்தனை செய்வதும் உண்டு.
நாம் அனுப்பிய வாழ்த்து அட்டை சென்று சேர்ந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தபால்காரரிடம் சந்தேகங்களை கேட்டு பலர் நச்சரிப்பதும் உண்டு. அவ்வளவாக தொலைபேசி வசதி இல்லாத அந்த காலத்தில் பதில் கடிதம் வந்தால் தான், வாழ்த்து அட்டை சென்று சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அந்த அட்டையில் காதல், சோகம், ஏக்கம்,இன்பம்,பாசம் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.
தொலைபேசி வசதி வந்த நிலையில், வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல மறைய தொடங்கியது. ஏராளமானோர் தொலைபேசியில் பொங்கல், தீபாவளி,புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர்.
அதனைத்தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்புவது பிரபலமானது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தொலைபேசி நிறுவனங்கள் பண்டிகை நேரத்தில் வாழ்த்து அனுப்பினால் அதற்கென தனிக்கட்டணங்களை வசூலிக்க தொடங்கின. நாம் என்ன சளைத்தவர்களா? பண்டிக்கைக்கு முன்னதாகவே வாழ்த்துக்களை அனுப்பி அதில் ஒரு சிறிய சுகம் காண்போம்.
தற்போது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா, மெயில் என வாழ்த்துக்களை அனுப்ப ஏராளமான வசதிகள் வந்து விட்டன. அதனால் வாழ்த்து அனுப்புவதும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பியது தனி சுகம் தான்.