ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்தவர் மேவாராம் ஜெயின். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உட்பட 9 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் புகார் அளித்தார்.
அப்புகாரில், மேவாராம் ஜெயின் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதனடிப்படையில் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதனிடையே, மேவாராம் ஜெயின் மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு நிலவிவந்த நிலையில், சமீபத்தில் அவரது 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மேவாராம் ஜெயின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.வான மேவாராம் ஜெயின் இன்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.