பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சீனா, அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பூட்டான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தையும் சீனா ஆட்டைய போட்டிருக்கிறது.
சீனாவை பொறுத்தவரை, தனது அண்டை நாட்டு எல்லைகளை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, மியான்மர், வியட்நாம், நேபாள், பூட்டான் மற்றும் கடல் பகுதியில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா என தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது.
அதேபோல, திபெத் பீடபூமியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், சீனாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் எல்லை தொடர்பான மோதல்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூட்டானை தனது ஆக்டோபஸ் கரங்களால் சீனா ஆக்கிரமித்து வருகிறது.
பூட்டானை எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் தலைநகர் டெல்லியைவிட பரப்பளவில் சிறியது. அப்படி இருக்க, பூட்டானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு பகுதிகளை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்களையும் கட்டி வருகிறது.
இந்த நிலையில், பூட்டானின் பெயுல் கென்பஜாங்க் எனப்படும் கலாசார தொடர்புடைய நிலப்பகுதியை தற்போது சீனா ஆக்கிரமித்து வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள இடங்களில் ஏராளமான குடியிருப்புக் கட்டடங்களை சீனா கட்டி வருகிறது.
பொதுவாகவே, சீனா பிற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது, அப்பகுதிகளில் கட்டடங்களை கட்டி, தனது நாட்டு மக்களை அங்கு குடியமர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல, பூட்டானின் ஆக்கிரமிப்புப் பகுதியிலும் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது, ‘சாட்டிலைட்’ படங்கள் வாயிலாக தெரியவந்திருக்கிறது.
இந்த சூழலில், சீனா ஆக்கிரமித்த அந்தப் பகுதி, பூட்டான் அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத நிலையில் பூட்டான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், இதுபோல அந்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.