பொங்கல் என்பது அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நாள் என்றே சொல்லலாம். சிலர் புத்தாடை அணிவதுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள், சிலர் வகைவகையான பொங்கல் மற்றும் கரும்புக்காக காத்துக் கொண்டிருப்பார்கள், சிலர் 4 நாள் விடுமுறைக்காக கூட காத்துக்கொண்டிருப்பார்கள்.
இந்த வகையில் மேலும் சிலர் பொங்கல் அன்று வெளிவரும் புது படங்களை காண காத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற நாட்களில் வெளியாகும் புதுப்படங்களுக்ளை விட பொங்கல் போன்ற திருநாட்களில் வெளியாகும் புது படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சென்ற ஆண்டு வாரிசு, துணிவு என தல தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படங்களை குறித்து பார்ப்போம்.
கேப்டன் மில்லர் :
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அயலான் :
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமான அயலான் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வெளியாக உள்ளது. இப்படம் அறிவியல் சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் என்டர்டெயினராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ஷரத் கேல்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிரகத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியைச் சுற்றி இப்படம் நகர்கிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
குண்டூர் காரம் :
மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குண்டூர் காரம். திரி விக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு உடன் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிஷன்: அத்தியாயம் 1 :
அருண் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் மிஷன்: அத்தியாயம் 1. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், நிக் கான், டைகோரா ஸ்மித் மற்றும் பலர் நடித்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட தனது மகளை சந்திப்பதற்காக எல்லா தடைகளையும் மீறி தப்பிக்க முயலும் ஒரு கைதியை சுற்றி கதை நடக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஹனுமான் :
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், சமுத்திரகனி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது.
மேரி கிறிஸ்மஸ் :
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் தடம் பதித்து வெற்றி கொடி நாட்டி வரும் வேளையில் தற்போது பாலிவுட்டின் கனவு கன்னி கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்மஸில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்பில் வெளியாகியுள்ளது.