தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது.
தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ஒன்றிப்போன மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசுவார்கள். பின்னர் ஊர் கோவிலில் இருந்து மஞசுவிரட்டு விரட்டப்படும். இதில் காளை, பசு, கன்றுக்குட்டி என அனைத்தும் விரட்டப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய அளவில் நடைபெறும் விழாவில் அங்கு உள்ள இளைஞர்கள் மாடுகளை பிடிப்பார்கள்.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் பல கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி, காவல்துறை அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நாட்கள் அலைய வேண்டி இருப்பதால் மஞ்சுவிரட்டு நடத்த கிராம பெரியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சிறிய அளவில் சில மணி நேரம் நடைபெறும் மஞ்சுவிட்டுக்காக பல நாட்கள் அலைய வேண்டி இருப்பதாகவும், அதிக செலவி ஆவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால், போலீஸ், கோர்ட் என நடக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சிறிய அளவிலான மஞ்சுவிரட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும், மஞ்சுவிரட்டு குறைந்துள்ளதே தவிர ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறாத பல கிராமங்களில் கூட தற்போது போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளன.