புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள், மண்டலத் தலைவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு அமர்வில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய குற்றவியல் சட்டங்கள் ‘முதலில் குடிமகன், முதலில் கண்ணியம், முதலில் நீதி’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டது.
புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் நிலைநாட்டப்படும். மேலும், அவர்களது பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குடிமக்கள் மத்தியில் காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
குடிமக்களின் நலனுக்காக நேர்மறையான தகவல்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு காவல் நிலைய அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும். எல்லைக் கிராமங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்த அரசு அதிகாரிகள் எல்லைக் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், இந்த நிகழ்வில் சிறப்பான சேவைகளுக்கான காவல்துறை பதக்கத்தை வழங்கிய பிரதமர் மோடி, அரபிக்கடலில் இந்திய கடற்படையின் விரைவான நடவடிக்கையையும், ஆதித்யா எல்-1 வெற்றியையும் பாராட்டினார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், “இந்திய கடற்படை மிகுந்த துணிச்சலுடன் தங்கள் கடமையை நிறைவேற்றியது.
அரபிக்கடலில் வணிகக் கப்பலில் இருந்து தங்களுக்கு நெருக்கடியான அழைப்பு வந்தவுடன், கடற்படை மற்றும் கடற்படை கமாண்டோக்கள் விரைந்து செயல்பட்டு 15 இந்தியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆதித்யா எல்-1, சுமார் 15 லட்சம் கி.மீ. பயணம் செய்து தனது இறுதி இலக்கை உத்தேசித்த நேரத்தில் அடைந்திருக்கிறது. சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றி இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கு சான்று” என்று பிரதமர் கூறினார்.
மாநாட்டில், சைபர் கிரைம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச்சாலை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை மற்றும் உள்பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.