பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான Make my trip தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது லட்சத்தீவு பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நினைவுகூர்ந்திருந்தார்.
அப்போது, கடற்கரையில் வாக்கிங் சென்றது, ஸ்நோர்கெலிங் செய்தது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து தீவு நகரம் குறித்தும், அம்மக்கள் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே, பிரதமர் மோடியின் இப்பதிவை பார்த்துவிட்டு, மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதாவது, இந்தியர்களை சுகாதாரமற்றவர்கள் எனவும், அழுக்கானவர்கள் எனவும் ஜாஹித் ரமீஸ் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர்.
மேலும், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்றும், லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்குப் பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான மேக் மை டிரிப் (Make my trip) தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் மற்றும் இந்தியப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன்,பீச் ஆஃப் இந்தியா (BEACH OF INDIA) பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கடற்கரைகள் பிரச்சாரத்தை தொடங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் சிறந்த மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். எப்படி செல்வது, எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருவதாக make my trip வணிக அதிகாரி ராஜ் ரிஷி சிங் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள நிலையில், மாலத்தீவுக்கான எந்த முன்பதிவையும் ஏற்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக இணை நிறுவனர் பிரசாந்த் பிட்டி கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் மாலத்தீவுக்குச்செல்கிறார்கள்.அவர்களால் இனி அங்கு பயணிக்க முடியாது. மாலத்தீவை விட சிறந்த இடங்கள் இந்தியாவில் உள்ளது என்பதை பிரதமர் மோடி எங்களுக்குக் காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் சர்வதேச சுற்றுலா தலங்களாக மாற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.