உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு (2024) காந்தி நகர் மகாத்மாமந்திரில் நடைபெறுகிறது. ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.இந்த மாநாடு 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக விமான மூலம் பிரதமர் மோடி அகமதாபாத் சென்றார். அவரை குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது, உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.
ஜனவரி 10ஆம் தேதி காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் குஜராத் குளோபல் உச்சி மாநாடு 2024ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.அதன்பிறகு, உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்திக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சற்று முன் அகமதாபாத்தில் தரையிறங்கினேன். அடுத்த இரண்டு நாட்களில், குஜராத் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இந்த உச்சி மாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
என் சகோதரன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வருகை மிகவும் சிறப்பு வாய்ந்தது.குஜராத் உச்சி மாநாட்டுடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்த தளம் குஜராத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களித்தது மற்றும் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கியது என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.