பொங்கல் தினத்தன்று நகர தெருக்களில், கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தப் போட்டிகளை குறித்து பார்ப்போம்.
1. கபடி :
கபடி என்பது சடுகுடு அல்லது பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் தமிழர்களின் வீர விளையாட்டு. இது ஜல்லிக்கட்டிற்க தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி விளையாட்டு. தற்போது கபடியின் புகழ் உலகமெங்கும் பரவி பல சர்வதேச தரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.
2. உறியடி :
கண்ணைக் கட்டிக்கொண்டு கையிலுள்ள கொம்பால் தலைக்கு மேல் தொங்கும் உரியை சரியாக அடிக்கவேண்டும். உறியை அடித்து வெற்றி பெறுபவருக்கு அதில் வைக்கப்பட்டுள்ள பரிசு பொருள் கிடைக்கும்.
3. சிலம்பம் :
பண்டைய காலங்களில் மக்கள் தங்களை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும். இது நாளடைவில் தமிழர்களின் வீர விளையாட்டாகவும் மாறியது. விழா காலங்களில் சிலம்பம் போட்டி வைப்பது வழக்கம்.
4. இளவட்டக்கல் :
இளவட்டக்கல் என்பது இளைஞர் தூக்கும் கல் என பொருள். குறிப்பிட்ட கல்லை தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது வழக்கம். இந்த விளையாட்டு போட்டி பொங்கல் போன்ற விழா காலங்களில் கிராமங்களில் நடைபெறுவது வழக்கம்.
5. வழுக்கு மரம் ஏறுதல் :
வழுக்கு மரம் ஏறுதல் விளையாட்டு என்பது பட்டை குறிக்கப்பட்ட ஒருவர் உயரமான வழுவழுப்பான பாக்கு மரத்தின் மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு ஆகும்.
6. ரேக்ளா ரேஸ் :
ரேக்ளா ரேஸ் என்பது கிராமங்களில் பண்டிகை காலங்களில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயம். பந்தயத்திற்கென்ற சிறப்பாக வடிவைமைக்கப்பட்ட சிறிய மாட்டு வண்டியில் இந்த பந்தயம் நடைபெறும். இலக்கை முதலில் அடையும் மாடுகளின் வீரர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.