பொங்கல் பண்டிகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு போக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிவந்தன. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இந்தப் பேருந்துகள் வந்து செல்வது நகரின் மையப் பகுதியில் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல், விழாக் காலங்களில் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து, கிளாம்பாக்கத்தில் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உருவாக்கியிருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பேருந்துநிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையம் கடந்த 2023 டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. உணவகம், ஓய்வு அறை, வாகன பார்கிங் வசதிகள், மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC), மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (SETC) முதற்கட்டமாக இங்கிருந்து இயங்கத் துவங்கியிருக்கின்றன. விரைவிலேயே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கிருந்தே இயங்கவிருக்கின்றன.
கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளின் இயக்கம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறியாத பயணிகள் சற்றுத் திண்டாடிப் போயிருக்கிறார்கள்.
“நாங்கள் கோயம்பேட்டிலிருந்து டிக்கெட் பதிவுசெய்திருந்தோம். கோயம்பேட்டிற்குப் போன பிறகுதான் பேருந்துகள் அங்கிருந்து புறப்படாது, கிளாம்பாக்கத்திலிருந்துதான் புறப்படும் என்பது தெரிந்தது.
பிறகு கோயம்பேட்டிலிருந்து பேருந்தைப் பிடித்து மிகுந்த சிரமப்பட்டு இங்கே வந்தோம். இந்தப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினால், அங்கிருந்து ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது.
எங்களுக்கு நான்கரை மணிக்குப் பேருந்து. ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. போய் பார்த்தால் தான் தெரியும். எங்களுக்கு உண்மையிலேயே மிக சிரமமாக இருக்கிறது. மக்களை இதற்குத் தயார் செய்திருக்க வேண்டும்” என்றார்.
மேலும் மாநகரப் பேருந்துகளின் மூலம் இந்தப் பேருந்து நிலையத்தை அடைபவர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டியிருப்பது, படிகளில் இறங்கி ஏற வேண்டியிருப்பது போன்றவை பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பேருந்து நிலையத்தை வந்தடைய பேட்டரி கார்கள் போன்ற ஏற்பாடுகள் இருந்தாலும் கூடுதலாக சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.
“மாநகரப் பேருந்தில் வந்தால் பேருந்திலிருந்து இறங்கி இங்கே வர வேண்டுமானால், லிஃப்டில் போக வேண்டும், எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்கிறார்கள். விவரம் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் கடினம்.
மாநகரப் பேருந்தில் வந்து இறங்கினால், புறநகர் பேருந்தைப் பிடிப்பது எளிதாக இருக்க வேண்டும். கோயம்பேட்டில் அப்படித்தான் இருந்தது” பயணி ஒருவர் தெரிவித்தார்.
சில பயணிகள் இது பற்றி கூறும் போது, மாநகரப் பேருந்துகளை, புறநகர்ப் பேருந்து நிலையத்தின் வாசல் வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் .
மேலும் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இந்த பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, லட்சக்கணக்கான சாமானிய மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.