அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அயோத்தி விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறந்துவைத்தார். கடந்த 6ஆம் தேதி முதல் அயோத்தி விமான நிலையத்தில் இருந்து விமானப்போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் அயோத்தியில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் என உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புனித நகரத்திற்கு பார்வையாளர்களின் வருகையை எளிதாக்க ஹெலிகாப்டர் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். ஏற்கனவே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து, சுற்றுலா எழுச்சி பெறும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கோயில் நகரத்துக்கு சிறந்த இணைப்புக்காக கூடுதல் ரயில் சேவைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.நீர்வழி போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.