இந்தியத் துப்பாக்கி சுடும் வீராங்கனை இஷா சிங் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
பாரீஸில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி சுற்றான இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 385 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் பங்குபெற்றனர்.
இந்தப் போட்டியில் 19 வயதே ஆன இந்திய வீராங்கனை இஷா சிங் 243.1 புள்ளிகளைப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இதில் பாகிஸ்தான் வீராங்கனை கிஷ்மலா தலாத் 236.3 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் 214.5 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கமும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் இஷா சிங் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதேபோல் பாகிஸ்தான் வீராங்கனை கிஷ்மலா தலாத்வும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.