கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய வழக்கில் பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கு அரசு பங்களாவை காலி செய்யக் கோரி மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. அம்மாநிலத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார்.
இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே மக்களவையில் புகார் செய்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரை செய்தார். அதன்படி, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, மஹுவா மொய்த்ரா கடந்த 8-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை 30 நாட்களுக்குள் காலி செய்யக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்தும் மஹுவா மொய்த்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ராவுக்கு ஒதுக்கிய அரசு பங்களா அனுமதியை ரத்து செய்ய வீட்டு வசதி மற்றும் ஊரக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சககத்திற்கு உத்தரவிட்டதோடு, காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
அதன்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.