புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரியில் விடிய விடிய மழை பொழிந்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ரெட்டியார்பாளையம், பாவாணார் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், நடேசன் நகர் இந்திராகாந்தி சதுக்கம், முதலியார்பேட்டை, உப்பளம் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் உட்புகுந்து மக்கள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக நகரின் மையப்பகுதியிலுள்ள பாவாணார் நகர், நடேசன் நகர், பூமியான்பேட் பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. வீட்டில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறித்தினார்.