அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கார் பேரணி நடைபெற்றது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 216 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. இதில் 500 இராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஹூஸ்டன் நகரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி 100 மைல்களை கடந்து, ரிச்மண்டில் உள்ள ஸ்ரீ ஷரத் அம்பா கோயிலில் நிறைவு பெற்றது. காரில் காவிக்கொடி கட்டியபடி சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேரணி, வழியில் 11 கோவில்களில் நிறுத்தப்பட்டன.
சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் என சுமார் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்ணீர் மல்க பஜனையுடன் பேரணியை வரவேற்றனர். கார் பேரணி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு கோயில்களில் கூடியிருந்த பக்தர்கள் காட்டிய பக்தியும் அன்பும் மகத்தானது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் இதயத்தில் பகவான் ஸ்ரீ ராமர் நிச்சயமாக வசிப்பதாக விஸ்வ இந்து உறுப்பினர் அமர் தெரிவித்துள்ளார்.