புனித யாத்திரைத் தலங்களை புனிதமானதாக மாற்றும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ‘ஸ்வச் மந்திர்’ (சுத்தமான கோவில்) பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்வச் மந்திர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், “அயோத்தியை இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற்ற குடிமக்கள் ஒன்றிணைய வேண்டும்.
மகர சங்கராந்தி (ஜனவரி 14) தொடங்கி ஜனவரி 22-ம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள சிறிய புனித யாத்திரை தலங்களில் தூய்மை பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, அயோத்தி மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையில், “இனி நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்திக்கு தொடர்ந்து வருகை தருவார்கள். எனவே, அயோத்தியில் வசிப்பவர்கள் ராம்நகரியை இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ஆகவே, ஸ்ரீராமர் வரும்போது ஒரு கோவிலோ அல்லது புனிதத் தலமோ கூட அசுத்தமாக இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும், இந்தப் பிரச்சாரத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் ஈடுபடுவார்கள். இவர்கள் தூய்மை இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்ய ஒத்துழைப்பார்கள்.
மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் வழிபாட்டுத் தலங்களை அடையாளம் காண கட்சி நிர்வாகிகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.