ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும், அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தின வந்தன.இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள் மிசா பார்தி எம்பி , லாலு பிரசாத் யாதவின் மற்றொரு மகள் ஹேமா யாதவ் (40), யாதவ் குடும்பத்தின் “நெருங்கிய கூட்டாளி” என்று கூறப்படும் அமித் கத்யால் (49), ஹிருதயானந்த் சவுத்ரி ஆகியோர் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் மொத்தம் ஏழு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஜனவரி 16 ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.