பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் அக்கட்சித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாகவே இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தது. இது கடந்த 6 மாதங்களாக உச்சத்தை அடைந்த நிலையில், பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க.வின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, பா.ஜ.க. தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், அ.தி.மு.க. கூட்டணி தேவையா என்பது குறித்து தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் கட்சியின் டெல்லித் தலைமை கருத்துக் கேட்டிருக்கிறது.
இது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 15 பேருக்கு கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்கடிதத்தில், “தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டுமா அல்லது தனித்தே போட்டியிடலமா? மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து கருத்துக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தங்களது கருத்தை எழுதி டெல்லித் தலைமைக்கு தபாலில் அனுப்பி இருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, “பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நாங்களும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதிருந்து கூறி வருகிறோம்.
இந்த சூழலில்தான், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுக்கு, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா?
சிறிய கட்சிகளின் நிலை என்ன? அ.தி.மு.க.வுடனான உறவு எப்படி உள்ளது? அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா? என்பது உள்ளிட்ட 12 கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சி மேலிடம் கேட்டிருக்கிறது. நிர்வாகிகளும் தங்களின் கருத்தை எழுதி நட்டாவுக்கு அனுப்பி விட்டனர். இதனடிப்படையில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்திருக்கிறது” என்றனர்.