எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாடாளுமன்றத்தின் கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் போபால் நகரில் “பிரபோதன்” என்ற பெயரில் நடைபெற்றது. இதை நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், கடந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 140-க்கும் மேற்பட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “ஒரு ஜனநாயக நாட்டில் சட்டமியற்றும் அவையின் கண்ணியம் மற்றும் மாண்பை உறுப்பினர்கள் மீறுவது நல்ல செய்தியை வெளிப்படுத்தாது. அவை விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான விவாதங்களின் மூலமே சிறந்த தீர்வுகள் கிடைக்கும். ஆனால், தற்போது அவை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து, அமளியில் ஈடுபடும் புதிய பாரம்பரியம் உருவாகி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
சட்டமியற்றும் அவையில் உறுப்பினர்களின் நடத்தை கண்ணியத்துடன் இருப்பதோடு, ஒழுங்குமுறை அவசியம். அவை ஆக்கபூர்வ விவாதங்களுக்கானது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவையின் கண்ணியத்துக்கு சிறு குறைவும் ஏற்படக் கூடாது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், நாடாளுமன்ற கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது. இதில் சமரசத்துக்கு இடம் கிடையாது” என்று கூறினார்.