பிரிட்டனுக்குப் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து பேசினார்.
3 நாள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள் கிழமை இரவு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினாா். பின்னர் லண்டன் டேவிஸ்டாக்கில் உள்ள பூஜ்யா பாபுவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக ராஜ்நாத்சிங் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் ஆலோசனை நடத்தினேன். இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2002-இல் அப்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஒருவா் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். முன்னதாக ஜூன் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு ராஜ்நாத் சிங் திட்டமிட்டிருந்த பயணம், சில காரணங்களால் இந்திய தரப்பால் கைவிடப்பட்டது.