இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை தோனி தொடங்கியுள்ளார்.
17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.
2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த பின், 2018, 2021, 2023 என்று ஐபிஎல் தொடரில் ஒற்றை அணியால் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2020ஆம் ஆண்டு வரை மும்பை அணி சிறப்பாக ஆடி வந்தாலும், அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இதன் காரணமாகவே மும்பை அணியில் அடுத்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சக்கட்டமாக கேப்டனையே மாற்றும் அளவிற்கு மும்பை அணி முடிவுகளை எடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஒருமுறை கோப்பை வென்றாலே, மும்பை அணி நிர்வாகம் 2 முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக இருப்பார்கள்.
இதனால் இம்முறை ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அணிகளும் அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
ஏற்கனவே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள எம்எஸ் தோனி, எப்போது பயிற்சியை தொடங்குவார் என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ராஞ்சியில் எம்எஸ் தோனி பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. புதிய ஹேர்ஸ்டைலில் சிஎஸ்கே பயிற்சி உடையுடன் தோனி காணப்படுகிறார்.
42 வயதாகும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் சீசனே கடைசி என்று பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மெகா ஏலம் நடக்க வாய்ப்புள்ளதால், தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடைசி சீசனிலும் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கான பயிற்சியை தோனி 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.