திருச்சி விமான நிலையத்தில், ரூ.64 இலட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான, 1024 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவதும், இதை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து, அதிரடியாக பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில், மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு, மலிந்தோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், உடனடியாக அவரை தனி அறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை சோதனை செய்ததில், வயிற்றுக்குள் மறைத்து வைத்து பேஸ்ட் வடிவில், 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.64 இலட்சத்து 51 ஆயிரம் ஆகும்.
இதனை அடுத்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.