பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புக்களுக்கான எதிர்கால திட்டமிடலுக்கான கருவியாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் இன்று (10.01.2024) நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதமரின் விரைவுசக்தி குறித்த நிகழ்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய பியூஷ் கோயல்,
பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை என கூறியுள்ளார். முழுமையான வளர்ச்சி தொடர்பான முடிவுகளுக்கான தரவுகள்” என்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பிரதமரின் விரைவுசக்தி, இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் உள்கட்டமைப்புக்கான எதிர்கால திட்டமிடல் கருவியாக உள்ளது என்று கூறினார்.
திட்டங்கள் நீண்டகாலம் தாமதமடைதல் மற்றும் செலவு அதிகரிப்பு ஆகிய சவால்கள் முன்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விரைவுசக்தி தொடர்பாக பேசியவர், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்த போது இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குஜராத்தை முதலீட்டு மையமாக மாற்றியமைப்பதில் உள்கட்டமைப்பின் முக்கியப் பங்கை உணர்ந்த பிரதமர், வலுவான உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமரின் விரைவுசக்தி மூலம் சிறந்த திட்டமிடல், பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவான தரவுகள் ஒருங்கிணைப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் ஆனால் செலவுகள் அதிகரிக்கும் என்றும் அது மக்களையும் பாதிக்கும் எனவும் கூறினார். மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காகவும் விரைவான, திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமரின் விரைவுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கில் சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், அரசுத் துறைகள் மற்றும் பிரதமரின் விரைவுசக்தி கட்டமைப்பு திட்டக் குழு போன்றவற்றின் பங்கேற்புடன் ஆக்கபூர்வமான உரையாடல்கள் இடம் பெற்றன.