அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி, நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இதுவரை 7,000 பேருக்கு மேல் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விட்டது.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதிரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்புகள் குறித்து சரியான நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அயோத்தி கோவில் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கடவுள் இராமரை பல லட்சம் மக்கள் வழிபடுகிறார்கள்.
மதம் என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இராமர் கோவிலை அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு திறப்புவிழா நடத்துவதற்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே காரணம்.
எனவே, இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதையுடன் மறுக்கின்றனர். மேலும், இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.