சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தன்னார்வ உடல் தானப் பிரிவு, முதல் உடல் தானத்தைப் பெற்றுள்ளது.
சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உடற்கூறியல் துறையில் தன்னார்வ உடல் தானப் பிரிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தன்னார்வலர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் மருத்துவக் கல்வி (உடற்கூறியல்), ஆராய்ச்சி நோக்கத்திற்காக தங்கள் உடலை தானம் செய்யப் பதிவு செய்கின்றனர். இப்படிப் பதிவு செய்தவர்களில் ஒருவரான திருமதி ராணி வேலுகாந்தன் (என்.வேலுகாந்தனின் மனைவி மற்றும் வி.கோபால கிருஷ்ணனின் தாயார்) 09.01.2024 அன்று காலமானார்.
அவரது உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இன்று (10.01.2024) உடற்கூறியல் துறைக்கு முழு மனதுடன் தானம் செய்தனர். உரிய மரியாதையுடன், உடற்கூறியல் துறை அவரது உடலை தானப்பிரிவு முதல் கொடையாளராக ஏற்றுக்கொண்டது.
இது தொடர்பாக, இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை, மருத்துவமனை தலைவர், ஊழியர்கள் ஆகியோர் கொடையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, தன்னார்வ உடல் தானப் பிரிவை நிறுவ அனுமதித்த தமிழக அரசு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிக்கு உதவியாக தன்னார்வ உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.