தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
142 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.