குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் இராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்திக்கான முதல் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் அகமதாபாத் – அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமானங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் இராமர், லட்சுமணன், சீதை, அனுமன் போன்ற வேடமணிந்து விமான நிலையத்திற்கு வந்தனர். இதை அடுத்து அயோத்திக்கு முதல் விமானம் செல்வதால், விமான நிலைய ஊழியர்களுடன் பயணிகள் இணைந்து, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.