நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் முக்கிய பங்கு வகிப்பதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் தினம் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராணுவ தளபதி மனோஜ் பாண்டே வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் முன்னேற்றம் தடையின்றி தொடர, நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதை நோக்கிய நமது தீர்மானம், ஒவ்வொரு நாளும் வலுவாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும், தேசத்தின் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போரின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள, கடந்த ஆண்டு ஒரு முழுமையான செயல்முறையை நாங்கள் முன்னெடுத்தோம். அதில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம், பல மைல்கற்களை எட்டியுள்ளோம்.
எங்கள் திறன் மேம்பாட்டு முயற்சிகள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நவீன, சுறுசுறுப்பான, தகவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்கால ஆயத்த சக்தியாக மாறுவதற்கான மாற்றம் தொடரும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.