அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குஜராத்தில் டப்கர் சமூகத்தினரால் தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள முரசு, அயோத்தியை வந்தடைந்தது. இந்த முரசு கோவில் வளாகத்தில் நிறுவப்படவிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள இராமஜென்ம பூமயில், 1,800 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவும், ராம் லல்லா சிலை பிரதிஷ்டையும் வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
விழாவை முன்னிட்டு, அயோத்தி இராமர் கோவிலுக்கு ஏராளமான பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. 2,100 கிலோ எடையில் மணி, 108 அடி நீளத்தில் அகர்பத்தி, 161 அடி உயரத்தில் கொடிமரம் என அனைத்துமே ஒன்றை ஒன்றும் மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டம் காட்டுகின்றன.
அந்த வகையில், குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள முரசு சிறப்பு ரதத்தில் அயோத்தியை வந்தடைந்திருக்கிறது.
இதுகுறித்து இராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், குஜராத் மாநிலம் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த முரசு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முரசு இராமர் கோவில் வளாகத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
முரசை கொண்டு வந்த குழு உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், “இந்த முரசு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
குஜராத் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் கூறுகையில், இந்த முரசை ஏற்றுக் கொள்ளுமாறு கோவில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.