பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சியால், உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில், உலகிலேயே மிகவும் பிரமாண்ட வகையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவில் வரும் 22 -ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி, சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது காரை ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நிமிலச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பைச் சேர்ந்த மாநில தலைவர் இல.கணபதி. இவர், வரும் 22 -ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, தனது காரில், ராமர், லட்சுமணன், அனுமான், சீதா தேவி உள்ளிட்ட சுவாமி படங்களையும், அயோத்தி ராமர் கோவிலையும் ஸ்டிக்கர் வடிவில் தனது காரில் அலங்கரித்துள்ளார்.
நகரின் முக்கிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை பொது மக்கள் பார்வைக்கு நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அந்த காரில் சென்று, பொதுமக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
காரில், அயோத்தி ராமர் கோவில், ராம பிரான் உள்ளிட்டோர் படங்கள் அச்சு அசலாக அலங்கரித்து இருப்பதால், பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.