அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையில் நடைபெறும் மகா யாகத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக சரயு நதிக்கரையில் 1008 நர்மதேஷ்வர் சிவலிங்கங்களை நிறுவுவதற்கான பிரமாண்டமான யாகம் நடைபெறுகிறது.
ஜனவரி 14 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெறும் மகா யாகத்தை நடத்த நேபாளத்தில் இருந்து 21,000 பூசாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்ககா பவ்ய ராம் மந்திர் தளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள சரயு ஆற்றின் மணல் மேட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு கூடார நகரம் நிறுவப்பட்டுள்ளது.
நேபாளி பாபா என்று அழைக்கப்படும் ஆத்மானந்த் தாஸ் மகாத்யாகி, மகா யாகத்தை ஏற்பாடு செய்து வருகிறார். இவர் அயோத்தியில் பிறந்து பின்னர் நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த யாகத்தை நடத்துவேன், ஆனால் இந்த ஆண்டு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மிகப்பெரிய யாகம் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
மகா யாகத்தில் தினமும் 50,000 பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும்,தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து படைக்க முடியும். ஒவ்வொரு நாளும் 1008 சிவலிங்கங்களுக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும்.
ஆயிரத்து நூறு தம்பதிகள் ஹவனம் செய்து 100 யாகக் குளங்களைச் சுற்றி ராம மந்திரங்களை ஓதுவார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் இருந்து சிவலிங்கங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.