தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், பிரதமர் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இந்த சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமைத் தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு புதிதாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் பிரதமருடன், மக்களவை எதிர்கட்சித் தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அம்மனுவில் மத்திய அரசு சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இச்சட்டம் அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது. இதனால் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
ஆனால், நீதிபதிகளோ “எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்.