அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி, நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
எனினும், விழாவில் கலந்துகொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்த சூழலில், இதுகுறித்த கேள்விக்கு விழா நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் அயோத்தி கோவில் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்குச் சமம் என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆவேசம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் மனம் உடைந்து போயிருக்கிறேன். ஸ்ரீராம் மந்திரின் அழைப்பை நிராகரிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மற்றும் தற்கொலை முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போர்பந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அர்ஜுன் மோத்வாடியா கூறுகையில், “பகவான் ஸ்ரீராமர் எங்கள் அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய தெய்வம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். இதுபோன்ற அரசியல் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் கூறுகையில், “அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும். அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ஸ்ரீராமர் மீது உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, இராமர் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் இராமர் கோவில்களை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், இராமர் கோவில் கட்டுவதற்கு எதிராகவும், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஆதரவாகவும் நீதிமன்றத்தில் வாதாடியவர்களில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.