நான் முதல்வர் பதவியில் இருந்துதான் விலகி இருக்கிறேனே தவிர, தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகவில்லை. மேலும், நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. ஆகவே, ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல்வராக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, மத்திய பார்வையாளர்களை நியமித்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்படி பணிக்கப்பட்டது. அதன்படி, புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பிறகு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிவராஜ் சிங் சென்றபோது, பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால், சிவராஜ் சிங் மனநிலை என்ன? முதல்வராக இல்லாத நிலையில் கட்சி நிர்வாகிகள் அவரை எப்படி பார்க்கின்றனர்? அவரின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். அதற்காக, நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்வர்கள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.
அதேசமயம், நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என்று செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்.
நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றார்.