ராகுல்காந்தியும் உதயநிதியும் வாரிசு அரசியலின் மிச்ச அடையாளங்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
பசுக்களையும், எல்லையையும், பெண்களின் மானத்தையும் காத்த மாவீரர்கள் நடுகல்லாக நிற்கும் பூமி பர்கூர். 800 ஆண்டுகள் பழமையான பர்கூர் மாதேஸ்வரன் கோவில் பர்கூரின் அடையாளங்களில் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள ஜிஞ்சம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள்.
2,000க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ள, ஜவுளி தொழிலுக்கு பெயர் பெற்ற பர்கூர், குட்டி சூரத் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.
ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும் திமுக அரசு அமர்ந்திருக்கும் நாற்காலியின் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான்.
திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள்.
இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவது திமுகவின் வழக்கம்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை.
திமுகவில் பதவியில் இருப்பவர்கள் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில், திமுகவினர் வாங்கிய பொருளுக்குப் பணம் தர மறுப்பதும், கடை உரிமையாளர்களைத் தாக்குவதும் தொடர்கதை. இவற்றை வைத்துத்தான் திமுகவின் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருமானம் வருவதற்காக, நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். ஆறு முறை ஆட்சியில் இருந்த திமுக, ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே கொண்டு வந்தது.
ஆனால், திமுகவினர் தொடர்பான தனியார் மருத்துவக் கல்லூரிகள் 17. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 15. மருத்துவக் கல்வி இடங்கள் இரட்டிப்பாகி இருக்கின்றன.
ஏழை எளிய மாணவர்களுக்கும் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி சாத்தியமாகி இருக்கிறது. திமுகவினர் நடத்தும் கல்லூரிகள் வருமானம் குறைந்து விட்டதால் நீட் ரத்து கையெழுத்து இயக்கம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் வகுப்பறைகள் இல்லாமல் வெட்டவெளியிலும் மரத்தடியிலும் பாடம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் மீது மரம் விழுந்து பல மாணவர்கள் காயமடைந்த துன்ப சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால், இவற்றைச் சரி செய்யாமல், நீட் தேர்வை எதிர்ப்போம் என்று கூறுவது திமுகவின் வருமானம் பாதிக்கப்பட்டதால் தான்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் இந்தியாவிலேயே அதிகப்படியான கடன் வாங்கிய மாநிலம் ஆகியிருக்கிறது. 8 லட்சத்தி 23 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தின் கடனாக உள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 3,61,000 கடன் இருக்கிறது. அது போக, மின்சாரக் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி, தண்ணீர் வரி, பத்திரப் பதிவுக் கட்டணம் என விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது.
1000 ரூபாய் உரிமைத் தொகை என்ற பெயரில் கொடுப்பதாகக் கூறிவிட்டு, பொதுமக்களிடம் இருந்து பல மடங்கு வசூலிக்கிறது திமுக அரசு.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000, நூறு நாள் வேலைத் திட்ட சம்பளம், மானியங்கள், முத்ரா கடன் உதவி என அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்புகிறார். இடைத்தரகர்கள் இல்லை.
ஊழல் இல்லை. லஞ்சம் இல்லை. கமிஷன் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ரூ. 8 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் திமுக வழங்கும் பொங்கல் தொகுப்புப் பணமான 1,000 ரூபாயை வாங்க, திமுக கிளைச் செயலாளரின் தயவு வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வாராவாரம் பாராட்டு விழா நடத்தியதுதான் திமுக தமிழ் மொழியை வளர்த்த முறை.
கடந்த ஆண்டு, 55,000 குழந்தைகள் தமிழ் மொழித் தேர்வில் தோல்வியடைந்தது தான் திமுக தமிழ் மொழியை வளர்த்ததற்குச் சான்று. ஆனால், நமது பிரதமர், தமிழ் மொழியின் பெருமையை ஐநா சபை முதல் உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார்.
திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதிக்கு காசி பல்கலைக் கழகத்தில் இருக்கை, திருவள்ளுவருக்கு ப்ரான்ஸ் நாட்டில் சிலை என உச்சமாக, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் தமிழர்களின் பெருமித அடையாளமான சோழர்களின் செங்கோல் அலங்கரிக்கிறது.
ராகுல்காந்தியும் உதயநிதியும் வாரிசு அரசியலின் மிச்ச அடையாளங்கள். உதயநிதியை 5 முறையும், ராகுல்காந்தியை 17 முறையும் முன்னிறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள், நமது பிரதமர் மோடி அவர்களை வெல்ல ராகுல்காந்தியால் முடியாது என்ற உண்மையைக் கூறியதற்கு, அவருக்கு கட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி அவர்கள். அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றதும், இந்தியா நன்றாக, வேகமாக, வலிமையாக வளரும். அதற்கு தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.