ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நிராகரித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, போப்பிற்கு எழுதிய பழைய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்,சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அந்த விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி நிராகரித்தவுடன் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று போப் பிரான்சிஸுக்கு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
எனது உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், இந்த புனிதமான விழாவைக் காண நானும் வந்திருப்பேன் என்றும், கருணையே உருவகமான பெண்ணுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்தி இருப்பேன் என சோனியா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனது சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான மார்கரெட் ஆல்வா மற்றும் லூசினோ ஃபலேரோ ஆகிய இருவரும் விழாவில் பங்கேற்பார்கள் என சோனியா காந்தி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.