ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் அரசு உழியர்களுக்கு இரண்டு மணி நேர சிறப்பு இடைவேளை அளிக்கப்படும் என மொரீஷியஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா, நேபாளத்தை தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
காலனித்துவ காலத்தில், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் தோட்டங்களுக்கு இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர். பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இடம்பெயர்ந்தனர்.இது மொரிஷியஸ் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அண்டை தீவுகளில் இந்து சமூகங்களை நிறுவுவதற்கும் வளர்ச்சியடைய செய்வதற்கும் பங்களித்தது.
இந்நிலையில், அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்பவும், சடங்குகள் செய்யவும் தொழிலாளி வர்க்க மக்களுக்கு இரண்டு மணி நேரம் விடுமுறை அளிக்குமாறு மொரிஷியஸ் சனாதன் தர்ம கோவில்கள் கூட்டமைப்பு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்து சமூக கலாச்சார குழுக்களின் முறையீட்டை பரிசீலிக்க பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தலைமையிலான அமைச்சர்கள் குழு வெள்ளிக்கிழமை கூடியது. அப்போது, ராமர் கோவில் திறப்பு விழாவின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரித்ததோடு, கொண்டாட்டங்களில் பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு இரண்டு மணி நேர சிறப்பு இடைவேளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.